Friday 6 January 2012

யாரோ ஒரு கனவில்...




பிறப்பில்லா வாலிபனாகி
பெயரில்லா காட்டுக்குள்,
நான் நிற்க எல்லாம் கடக்க
அதிவேக நிதானமாய் என் ஓட்டம்.
மரங்களின் அடர்த்தியில் மைல்கள் மறைய
தாவிக் குதித்து மேலே பறக்கிறேன்
என்னைக் கடந்து சிரித்து மறைந்தது
கடிகாரம் கட்டிய சிட்டுக்குருவி
மேகப் புகையொன்று கடக்கும் தருணம்
கடலின் பரப்புகளில் பாய்ந்து செல்கிறேன்
எதிரே கடந்த திமிங்கலம் முதுகில்
கழுத்தில்லா செஷாயர் பூனை ஒன்று
துள்ளிக் குதித்து விளையாடிச் சென்றது
ராட்சத அலையொன்று வளைத்துச் சுருட்ட
சதுரங்க கட்டங்களில் காய்களாய் நகர்கிறேன்
மன்னனை வீழ்த்தி வெற்றியில் களித்து
பானமும் பார்வையும் ஒருங்கே பரிமாற
அரண்மனை கேளிக்கைகளின் நடுவே அவள்,
தனிமை நெருக்கத்தில் கண்கள் மூட
சுகமாய் எனது பயணமும் தொடர்ந்தது
இன்பங்களடர்ந்த முடிவற்ற சாத்தியங்களுடன்
அவளின் கனவில்....!

மார்கழி இரவுகள்...

                       


இரவின் நிசப்த காகிதத்தில்
நவீன ஓவியமாய்
வண்டுகளின் ரீங்காரம்...

பல்வேறு ப்ருகா கமகங்களுடன்
தவளைகளின் இசைச் சங்கமம்

வாடையின் கரிசனத்தால்
சவாசனத்தில் மின்விசிறிகள்...

பனிகோர்த்த புள்ளிகளில்
வாகன இருக்கைகள்...

இலவச இணைப்பாய்
இருமலும் தும்மலும்....

நெருக்கத்தை உணர்த்தும்
இடைவெளி இறுக்கத்தில்
தளர்ச்சித் தனிமைகள்...

வழிபிறக்கும் தை நோக்கி
கற்பனை- கனவுகள் சுமந்து
கம்பளிக்குள் சுகமாய்
என் மார்கழி இரவுகள்....

Saturday 26 November 2011

நானாகிய நான்.....

                   

 பரந்த ஞாலப்பெருவெளியெங்கும்
வியாபித்திருக்கின்றன
என் இன்மையும் இருப்பும்...

நன்றாய் இருப்பதாய் நம்பும்
மகனைத் தொலைத்த தாயின்
மனநிலைபோல
இருப்பை விட
ஆழப் பதிந்துபோனது
இல்லாமையின் நிழல்......


கதறல்களின் மத்தியில் சவமாய்க்
கிடக்கும் தந்தையை மறந்து
எதிர்வீட்டு சிறுமியை
விளையாட அழைக்கும்
குழந்தையாய், எனக்குத் தெரிகின்றன  இரண்டும்......

கால நதியின் கரையினில்
வசந்தகால  வண்ணதுப்பூச்சியின்
பூதேடும் சிலிர்ப்பின் படபடப்பாய்,
நான் இரண்டுமாகிறேன்
இரண்டுமாய் நானிருக்கிறேன்....!

Saturday 15 October 2011

புரியவில்லை..

                                                                    

மொட்டைமாடியில்
சாய்ந்து நிற்கும்
தென்னங்கீற்றின் பின்னால்
பரீட்சைக்கு
தீவிரமாக
அவள் ...

நானும்
அதே தீவிரமான
பாசாங்குடன்
எதிர்மாடியில் ...

இரு புருவங்களின்
மத்தியில்
பேனாவின் பின்முனையால்
 தட்டியபடி
அவள் திரும்ப ....

ஆள்காட்டி விரலால்
காற்றில் வரைந்து,
மனனம் செய்ததை
எழுதிப்பார்க்கும்
என் நடிப்பு ...

எட்டு வருடங்கள்
ஆகிவிட்டது
வீடு காலி செய்து .....

இன்னும் எனக்குப்
புரியவில்லை ......

இருட்டிய பிறகும்
விளக்கில்லாத அந்த
மொட்டைமாடியில்,
என்ன
படித்துக்கொண்டிருந்தாள் ..?





(என் ஆரம்பகால முயற்சி கவிதைகள்  ....என் முகப்புத்தக நண்பர்களுடன்.....)

மீண்டும் ஒருமுறை....

                                                                


 எத்தனையோ இரவுகள்
எப்படி எப்படியோ
 கடந்துவிட்டன...

எத்தனையோ அதிகாலைகள்
வந்து வந்து
போய்விட்டன....

எத்தனையோ உணர்வு மாற்றங்கள்,
உணர்ச்சிக் கொந்தளிப்புகள்....

ஆனாலும் என் உணர்வின்
சுவாசத்தை இன்னும்
உயிர்ப்போடு வைத்திருப்பது...,
உன் கால்மேல் கால்போட்டு
உன் நெஞ்சாங்கூட்டின்
அரவணைப்பில் நான் நுகர்ந்த
அந்த வாசனை.....

சுவற்றில் புகைப்படமாய்
மாறிப்போன உன்னிடம்
கேட்கிறேன்......

"அம்மா...
என்னை அணைத்துக் கொள்வாயா...
மீண்டும் ஒரு முறை...?"

வாழ்கோட்டுச் சித்திரம்

                                                   



லட்சங்களில் ஒன்றைத்
துளைத்துவென்ற
மோதல்களின் இறுதியில்
துவங்கும் ஆரம்பம்


குளம்பிப் பிசைந்ததும்
நறுமணமாய் பரவும்
சவ்வாது கலந்த
சந்தனக்கீற்றுகளாய்
பூரிப்பும் பொலிவும்


விளைந்து வழியும்
பூங்கொல்லைகளில்
துரிதமாய் நடக்கும்
பூப்பறிப்பும் பூப்பிறப்பும்
காய்ந்த பூக்களை மிதித்தபடி


அடித்துச்செல்லும்
காலவெள்ளத்தில்
கசடுகளாய் ஒதுக்கப்படும்
தேவைப்பொறுக்கலும்
ஆசைச்சுருக்கலும்


எங்கோ கேட்கும்
ஊர்க்குருவியின் கதறலை
அவதானிக்க மறந்த
சுவாதீனமில்லாத
கூட்டுப்புழுக்களுடன் தொடரும்
சாத்வீக சதிராட்டம்


ஒரு
நமட்டுச்சிரிப்பை மட்டும்
இறுதியில் தந்துசெல்லும்
இருப்பின் நிறைவும்
இழப்பின் வலிகளும்....

Monday 1 August 2011

ஊழிக்கூத்து.....

                                                                    ஊழிக்கூத்து.....



நடிப்பின் சாகசங்களில்
தன்னை மறக்கும் ரசனை...

பொய்யை மட்டுமே
விரும்பும் நிஜம்...

நிலைத்து நிற்க நினைக்கும்
நிலையாமை....

கண்ணீரைத் தேடும்
புன்னகை...

காதலில்லா காமத்தின்முன்
பாசத்தின் கண்ணாமூச்சி...

தன்னையே வெறுக்கும்
 இயலாமை - அதற்குள்
ஞாய தர்மப் புலம்பல்கள்....

ஆடிமுடியட்டும் நாடகம்....

வெளியே காத்திருக்கும்
விதியின் உயரம்,
அடுத்த ஒரு
பொய் வேடத்துடன்.....!

(குறிப்பு : காமதிற்காகத்தான் காதலிக்கப் படுகிறொம் என்பதை உணர்ந்து வெறுக்கவும் முடியாமல், மறக்கவும் இயலாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலை... என் பார்வையில்.. என் ஆரம்பகால சென்னை வாழ்க்கையின்பொது எழுதியது..ஒருகதைக்கான யோசனையின்போது தோன்றிய வரிகள் ..)