Saturday, 26 November 2011

நானாகிய நான்.....

                   

 பரந்த ஞாலப்பெருவெளியெங்கும்
வியாபித்திருக்கின்றன
என் இன்மையும் இருப்பும்...

நன்றாய் இருப்பதாய் நம்பும்
மகனைத் தொலைத்த தாயின்
மனநிலைபோல
இருப்பை விட
ஆழப் பதிந்துபோனது
இல்லாமையின் நிழல்......


கதறல்களின் மத்தியில் சவமாய்க்
கிடக்கும் தந்தையை மறந்து
எதிர்வீட்டு சிறுமியை
விளையாட அழைக்கும்
குழந்தையாய், எனக்குத் தெரிகின்றன  இரண்டும்......

கால நதியின் கரையினில்
வசந்தகால  வண்ணதுப்பூச்சியின்
பூதேடும் சிலிர்ப்பின் படபடப்பாய்,
நான் இரண்டுமாகிறேன்
இரண்டுமாய் நானிருக்கிறேன்....!

Saturday, 15 October 2011

புரியவில்லை..

                                                                    

மொட்டைமாடியில்
சாய்ந்து நிற்கும்
தென்னங்கீற்றின் பின்னால்
பரீட்சைக்கு
தீவிரமாக
அவள் ...

நானும்
அதே தீவிரமான
பாசாங்குடன்
எதிர்மாடியில் ...

இரு புருவங்களின்
மத்தியில்
பேனாவின் பின்முனையால்
 தட்டியபடி
அவள் திரும்ப ....

ஆள்காட்டி விரலால்
காற்றில் வரைந்து,
மனனம் செய்ததை
எழுதிப்பார்க்கும்
என் நடிப்பு ...

எட்டு வருடங்கள்
ஆகிவிட்டது
வீடு காலி செய்து .....

இன்னும் எனக்குப்
புரியவில்லை ......

இருட்டிய பிறகும்
விளக்கில்லாத அந்த
மொட்டைமாடியில்,
என்ன
படித்துக்கொண்டிருந்தாள் ..?





(என் ஆரம்பகால முயற்சி கவிதைகள்  ....என் முகப்புத்தக நண்பர்களுடன்.....)

மீண்டும் ஒருமுறை....

                                                                


 எத்தனையோ இரவுகள்
எப்படி எப்படியோ
 கடந்துவிட்டன...

எத்தனையோ அதிகாலைகள்
வந்து வந்து
போய்விட்டன....

எத்தனையோ உணர்வு மாற்றங்கள்,
உணர்ச்சிக் கொந்தளிப்புகள்....

ஆனாலும் என் உணர்வின்
சுவாசத்தை இன்னும்
உயிர்ப்போடு வைத்திருப்பது...,
உன் கால்மேல் கால்போட்டு
உன் நெஞ்சாங்கூட்டின்
அரவணைப்பில் நான் நுகர்ந்த
அந்த வாசனை.....

சுவற்றில் புகைப்படமாய்
மாறிப்போன உன்னிடம்
கேட்கிறேன்......

"அம்மா...
என்னை அணைத்துக் கொள்வாயா...
மீண்டும் ஒரு முறை...?"

வாழ்கோட்டுச் சித்திரம்

                                                   



லட்சங்களில் ஒன்றைத்
துளைத்துவென்ற
மோதல்களின் இறுதியில்
துவங்கும் ஆரம்பம்


குளம்பிப் பிசைந்ததும்
நறுமணமாய் பரவும்
சவ்வாது கலந்த
சந்தனக்கீற்றுகளாய்
பூரிப்பும் பொலிவும்


விளைந்து வழியும்
பூங்கொல்லைகளில்
துரிதமாய் நடக்கும்
பூப்பறிப்பும் பூப்பிறப்பும்
காய்ந்த பூக்களை மிதித்தபடி


அடித்துச்செல்லும்
காலவெள்ளத்தில்
கசடுகளாய் ஒதுக்கப்படும்
தேவைப்பொறுக்கலும்
ஆசைச்சுருக்கலும்


எங்கோ கேட்கும்
ஊர்க்குருவியின் கதறலை
அவதானிக்க மறந்த
சுவாதீனமில்லாத
கூட்டுப்புழுக்களுடன் தொடரும்
சாத்வீக சதிராட்டம்


ஒரு
நமட்டுச்சிரிப்பை மட்டும்
இறுதியில் தந்துசெல்லும்
இருப்பின் நிறைவும்
இழப்பின் வலிகளும்....

Monday, 1 August 2011

ஊழிக்கூத்து.....

                                                                    ஊழிக்கூத்து.....



நடிப்பின் சாகசங்களில்
தன்னை மறக்கும் ரசனை...

பொய்யை மட்டுமே
விரும்பும் நிஜம்...

நிலைத்து நிற்க நினைக்கும்
நிலையாமை....

கண்ணீரைத் தேடும்
புன்னகை...

காதலில்லா காமத்தின்முன்
பாசத்தின் கண்ணாமூச்சி...

தன்னையே வெறுக்கும்
 இயலாமை - அதற்குள்
ஞாய தர்மப் புலம்பல்கள்....

ஆடிமுடியட்டும் நாடகம்....

வெளியே காத்திருக்கும்
விதியின் உயரம்,
அடுத்த ஒரு
பொய் வேடத்துடன்.....!

(குறிப்பு : காமதிற்காகத்தான் காதலிக்கப் படுகிறொம் என்பதை உணர்ந்து வெறுக்கவும் முடியாமல், மறக்கவும் இயலாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலை... என் பார்வையில்.. என் ஆரம்பகால சென்னை வாழ்க்கையின்பொது எழுதியது..ஒருகதைக்கான யோசனையின்போது தோன்றிய வரிகள் ..)

பெருந்தன்மை . . . .

பெருந்தன்மை . . . .

உன்னையறியாமல் நீ
என்பக்கமாய் புரண்டு படுக்க,
அந்த ஸ்பரிச சிலிர்ப்பில்
நான் உன்னை
இதமாய் அணைக்க,
ஒட்டிய உதடுகளுடன்
தூக்கத்தில் நீ
சிரித்தபடி என்
மார்பில் புதைகையில்...
"இன்னும் கொஞ்சம்
நீடிக்கட்டும்
இவன் கனவு" - என்று
சில நிமிடங்கள்
தன் விடியலை ஒத்திப்போடுகிறது
'காலை'....

---என் பழைய டைரியிலிருந்து.......

முரண்பிழை..!

(தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலன் சிலவருடம் கழித்து மீண்டும் தேடிவரும்போது தான் அவனை  எப்படியெல்லம் அலட்சியப்படுத்தி அவனை நோகடித்தேன் என்பதை என் தோழி என்னிடம் விளக்கிக் கூறிய அன்று நான் எழுதிய வரிகள்... அவனை எப்படியெல்லாம் விரும்பினாள், இப்போது எந்த வகையிலெல்லாம் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள் என்று அவள்  இருவேறு மன நிலைகளை .... பல்வேறு முகபாவங்களுடன் ஒரு சேர எடுத்துச் சொல்லியதைப் பார்த்து... சிலையாய்த்தான்  நின்றேன்... உள்ளூர சிலிர்த்தபடி....

என் பழைய டைரியிலிருந்தது....எந்த  மாறுதலும் இன்றி என் முகப்புத்தக நண்பர்களிடம் அப்படியே பகிர்ந்துகொள்கிறேன்)







                                                                      முரண்பிழை..!







கக்கித் தெறிக்கும்

வெறுப்புக் கனல்கள்

எல்லோரையும் பஸ்பமாக்கும்

எரிமலைக் குளம்புகளாய்,

பனிமலையின் நடுவில்....



ஆரத்தழுவி

அணைத்துப் புரண்டு

சிலிர்க்கும் தருவாயில்

மிதித்துத் தள்ளி

கதவடைத்து

உரக்க கத்துகிறேன்

தலையணை கடித்தபடி...





உணவு கொடுத்து

மருந்து மறுத்து

பிளந்த காயங்களுடன்

உயிர்மட்டும் மிச்சம் வைக்கும்

போர்க் கைதிபொல...

காலில் பணிந்து

கண்ணீரில் கழுவி

கதறி மன்றாட,

மண்ணில் தேய

முகத்தில்  மிதித்து

 கால்தடம் பதிய

கடந்து செல்கிறேன்...



அழ முடியாமல்

சிரிக்கவும் இயலாமல்

என்னயே எரித்தாவது

 துண்டுதுண்டாய் - உன்னை

சிதைத்துப் பார்க்கத் துடிக்கும்

என்  அந்தரங்கத்தின்

ஆற்றாமை....

"காதல்" என்கிற

வலியை சுமந்தபடி....

 ----

Thursday, 9 June 2011

பாட்டியும் .... கதையும்.... நானும்

                                                 
கதையும்  நானும் பாட்டிமடியில்

ஏழு மலையும் ஏழு கடலும்

நெருப்பு பாம்பு சிங்கமும் தாண்டி

தங்கக் கூண்டின் கிளியைத் தூக்கி

கடத்தி எடுத்து வந்தேன் பலமுறை

அரக்கனின் உயிரதன் கழுத்தில் இருக்க

 கழுத்தை திருகிக் கொல்லச் சொன்னாள்

பாட்டி அசந்து சற்றே திரும்ப

கூண்டின் கதவை நானும்  திறக்க

கிளியும் நன்றியாய் கத்திப் பறந்தது

பதறி அலறிப் பாட்டியும் வந்திட

எழுந்து ஓடி முகத்தைக் கழுவி

நிசப்த  அறையில் நானாய்ச் சிரித்தேன்

நாளையும் பாட்டி அதையே சொல்வாள்

நானும் அதையே  மறுபடி செய்திட....

Saturday, 2 April 2011

அவன் .....

                                                                     


 நீள சம்பக்கருதை வெட்டி
காக்காமுள் பனையிலைகுத்தி
ஆடிகாத்தில் ரெங்கிச் சுற்றும்
அழகாய் காத்தாடி செய்த
அவன்..............

ஒரு கையில் இறுக்கமாக
கால்சட்டை தூக்கிப்பிடித்து
விமானத்தை துரத்திமுந்த
கரட்டில் விரட்டி ஒடிய
அவன்.........

கஞ்சாக் குடிக்கி காளையனை
கண்டந்துண்டமாய் வெட்டியதை
கண்டுபயந்து மந்திரிச்சு
காய்ச்சல் வந்து கிடந்த
அவன்.........

பொத்தி வளத்த மைனாக்குஞ்சு
எறும்பு கடிச்சு சாகக்கண்டு
உங்கக் குடிக்க ஒப்பாமல்
ஓஞ்சு சாஞ்சு மாஞ்ச
அவன்.....


பக்கத்து வீட்டுக் கயலக்கா
ஒருநா கட்டில்ல புருசனோடு
சண்டபோடுதுன்னு நினச்சு
கட்டிலடியில் இருந்த
அவன்.......

தேங்காயில ஓட்ட போட்டு
மண்டவெல்லம் பொறியும்சேத்து
சுள்ளித் தீயின் நெருப்பில் வாட்டி
சுவைத்துச் சுவைத்துத்  தின்ற
அவன்............

நேத்துப் பாத்த காசிம்பாய்
நெஞ்சுவலிச்சு செத்துப்போக
நல்ல சாவுன்னு சொல்லுறதை
அழுதுகொண்டே கேட்ட
அவன்.....

சாமி பாக்கப் போறேன்னு
சாக்குப்போக்கு சொல்லிப்புட்டு
சரஸ்வதியில  ரஜினிபடம்
விசிலடித்து  ரசித்த
அவன்.....

கல்யாணப் பந்தலுக்குள்
கறிக்கூட்டு சண்டவந்து
திங்கவந்தவன் அடிபட்டு
ரத்தம்சொட்ட பார்த்த
அவன்.....


நடையும் உடையும் மாறிப்போச்சு
நடிப்புன்னு இப்போஆகிப்போச்சு
நாளும் கிழமையும் ஓடி ஓடி
நல்லது கெட்டது நடந்துபோச்சு...

சிரிப்புகூட இப்பெல்லாம்
மெதுவாத்தான் சிரிக்கணுமாம்
கதறிக்கத்த நெனச்சாலும்- வாய்
பொத்தித்தான் அழுவணுமாம்

எப்படிடா நீயி மட்டும்
அப்படியெ இருக்குறன்னு
பால்பாண்டிப் பய நேத்து
பொசுக்குன்னு கேட்டுப்புட்டான்

வெளக்கமச் சொல்ல எனக்கு
வெவரம் இன்னும் பத்தலப்பா
ஒத்தவரியில சொல்லணும்னா
"அவன்" இன்னும் சாகலப்பா

Thursday, 24 March 2011

ஈரங்க நாடகம்.....

  
நடுநிசியில்   வீசுமந்த    பாலைவனச்  சூரை
நால்வகையும் உதறிவீசும் தாண்டவத்தின் கூரை

கணக்குகளைப் பொய்ப்பித்த காலத்தின் மாற்றம்
தனக்கல்ல எனப்பொய்க்கும் கோபத்தின் தாக்கம்

சுற்றிசுற்றி தான்போட்ட சதுஸ்வரத்தின் வேலி
முற்றிமுற்றி சொல்லுமந்த மிஸ்ரத்தின்  போலி

தன்னிலிருந்து வருவதுதான் தயக்கமும் மயக்கமும்
தன்னிடத்தில் வந்ததற்கோ தாய்மையும்  பாசமும்

கட்டிவைத்த கட்டெல்லாம் கட்டாமல் ஓட
தட்டிவைத்த மெட்டெல்லாம் ஒட்டாமல் பாட

கொதித்துப் பொங்கியதோர் கொப்பளிக்கும் எரிமலை
தணித்துப்  பொய்க்குமவள் தத்தளிக்கும் மனநிலை

அப்படியும்  தூங்குகிறாள்  அத்தனையும் தாண்டி
எப்படிநான் எழுப்புவதென் எல்லைகளைத் தாண்டி....?

Sunday, 20 March 2011

நடுக்கடல் நாட்குறிப்பு....

                           

ஆதியும் அந்தமும் தொலைந்துபோய்
பாதியைச் சுமந்த ஓர் விழிப்புத்தூக்கம்....

நேரங்கள் வடிந்து அதனுள்ளே போக
கறுப்பாய்த் தெரிகிறது வானம்....

நீரின் பரப்பும் கருமையாய் மாற
நிசப்த சப்தங்களாய் என் இதயத்துடிப்பு...

நர்த்தனம் செய்யாத நடுக்கடல் - அதில்
ஜதிகள்  சொல்லும் என் நட்டுவாங்கம்....

கண்ணுக்கெட்டும் தூரம் வரை - என்
கண்ணுக்கு எட்ட எதுவுமில்லை....

போவதற்காகவெ வந்தென் இங்கு - எங்கே
போவதென்றே தெரியாத முடிவினில்....

பதில்கள் இல்லாத கேள்விகள் சுமந்தே
பதமாய்ச் செல்லும்  பாய்மரப்படகு.....

 நெட்டிமுறித்து சோம்பல் துரத்தி
சற்றே எழ நான் துவங்கும் தருணத்தில்.....

மெதுவாய் தோள்களைப் பற்றித் திருப்பி - என்
கண்களை நோக்கும் உதடுகள்...

அதில் பட்டுத்தெறித்து என் கன்னங்களில் ஒட்டும்
சாய்ந்து விழும் ஓர் மழைத்துளி...

ஆரம்பித்த தூறல் அதிகமாக....

இனிமேல் எனக்கெதற்கு  திசைமானியும்
கலங்கரைவிளக்கமும்.....?

Sunday, 13 March 2011

முன் அறிவிப்பு..


                                                         


அப்புறம்தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன
அழகியல் தேற்றங்கள் எல்லாம்....

சொற்களின் இடையிடையெ வரும் சிறு
மௌனங்கள்தான் இங்கு பிரதானம்......

ரோமக்கால்களில் முண்டித் துளிர்க்கும் பல
வியர்வைப்புள்ளிகள் சொல்லும் இதை.....

இடைவெளிகள் தூரமாகி வரும் நேரத்தில்
இடைப்பட்டவைகள் நெருங்குகின்றன.....

'எதுமுதல்' என்கிற கேள்விக்கு எல்லா
 பதில்களும் ஒன்றுதான்,'நான் முதல்' .......

'சரி புறப்படு' என்று வழியனுப்ப நினைக்கையில்
'நீ முதல்' என்கிறது ஒவ்வொன்றும்.....

எதுவுமே இல்லாமல் அடிக்கடி எதையொ
மென்று விழுங்கும் எச்சில் நாவுகள்....

இருக்கும் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைவாய் உணரும் கொதித் தருணங்கள்....

இழுத்துச் சுழற்றி படபடத்து அலையலையாய்
சீறிக் கொந்தளிக்கும் மூச்சுக்காற்று.....

இன்னும் இன்னும் சில நொடிகள்தான்- அடுத்து
இனிதாய்த் துவங்கும் ஒரு "ப்ரளயம்"......

Thursday, 10 March 2011

தனிவழிப் பயணம் ....

அருஞ்சுனையில் நீர்வரத்து இல்லை
மலை இரண்டாய்ப் பிரிகிறது .....

இதமான வெப்ப நுகர்ச்சியில் சற்று
நிதானமாய்த் துவங்கும் பயணம்......

தட்பவெப்பச் சமன்பாடுகள் எல்லாம்
இங்கு செல்லுபடி ஆவதில்லை....

அழிக்கப்பட்ட காட்டுப்பாதையின் முடிவில்
பரந்து துவங்கும் சமவெளி.....

புனைவுப்பாதைதான் இங்கெ - அதில்
புரியாமல் புரியும் புதிர்கள்......

மலைப்பாதையில் அம்மன்கோவில்போல
வற்றிப்போன  மொட்டைக் கிணறு....

'காசு' போட்டுத்தான் செல்கிறென்- அதில்
அடுத்தது கிடைக்குமென்ற ஆவலில்....

கணவாயின் வழியேதான் பயணிப்பு - பெரும்
ஏற்ற இறக்கங்கள் இல்லாமல்.....

ஒற்றையடி இணைப்புப் பாலம்தான் - அந்த
ஊற்றுக்குச் செல்லும் ஒரெ வழி......

துளி கவனமில்லாமலெ கடக்கிறேன் - மன
ராட்டின இறக்கப் படபடப்பில்...

பருகியதும் சேமித்ததும் முடிந்து - சற்றெ
இளைப்பாருதல் ஊற்றினைச் சுற்றி.....

மறுபடியும் துவங்கியது மந்தகாசப்பயணம்
புறப்பட்ட இடம் நோக்கி மாற்றுவழியில்......

பருவநிலை மாறியதால் இப்போது - பொங்கி
வழியுது அருஞ்சுனை, இரைச்சலுடன்....

எல்லாரும் வந்து செல்வார்கள்
நான்மட்டும் சென்று வருகிறென்
ஒருசிலர் போல.....

Monday, 7 March 2011

யுகம் கடக்கும் நிமிடங்கள் ....

                     

நிலை கொள்ளாச் சாலை

அதை பற்றிப் படர்ந்தே

தணல் பொங்கிப் புகைக்க

பலம் சேர்ந்த   பொழுதில்

உலை சிதறி இழுக்க

சுனை வற்றாப் பரப்பில்

சில்லெனக் குளிரும் கடுந்தணல்

இதச் சத்தமாய் அதிர்ந்து

வெடித்துச் சிதறி வியர்வையில்

உச்சியில் உயிரின் குடமுழுக்கு

அனைத்தும் அகோரக் குலவையாய்

மத்தியில் மடிந்து மாய்வதை

கலையன்றி வேறென்ன சொல்வாய்......?


                
                 (குறிப்பு : என் முகப்புத்தகப் பதிவாக பிப்ரவரி  26  அன்று  வெளியானது )

ஆறோடும் பாலை ....

      

நினைவுகளில்
தோய்ந்து தொலைந்து
மறந்தே போய்விட்டன
நினைவுகள்......

இப்படி ஒரு
சுட்டெரிக்கும்
கடும்வெயில்,
பாதி ராத்திரியில்....

அமிழ்ந்து சுகித்த
குளம்தாண்டி
அருவியைத்தேடிச்
செல்லும் ஈரம்......


இதமாய்ச்
சிரித்துத் தவழ்ந்தன
கடித்துக்குதறும்
காட்டேரிப் பற்கள்...

எச்சில் இதழால்
கன்னம் தொடும்
குழந்தை,
கதறியபடி....

விம்மல் இழுப்பில்
கட்டியணைத்த
ஏக்கப் பெருமூச்சு
பால்வெளிப் பதறலாய்....

மௌனவிரதத்தில்
நான்.....
கோடி கோடியாய்
உக்கிர உட்க்கத்தல்கள்....

கூட்டல் கழித்தலின்
சமனில்,
பரமாத்ம பிரகாரத்தில்
பகுத்தறிவு தரிசனம்......


(குறிப்பு : என் முகப்புத்தகப் பதிவாக மார்ச் 2  வெளிவந்தது ... )

Saturday, 5 March 2011

இன்று முதல்....



துவங்குகிறென் ஒரு பயணம்.....

என் "பாய்மரத்தில்".....

அகல ஆழ நீளக் கடலில்.....

கடந்தவைகளைச் சுமந்தும்,

கடப்பவைகளை அனுபவித்தும், இனி

 வருபவைகளை எதிர் நோக்கியும்,

எது இருந்தாலும்....

எது நடந்தாலும்...

எல்லாம்....எல்லாம்....எல்லாமே....

உங்களோடு........

ஒரு நல்ல தோழனாய்...

நிறைந்த மனதோடு - என்

பகிர்தலைத் துவங்குகிறென்...

இன்று முதல்....